இபிஎஸ் பிறர் காலில் விழுவதற்கு என்ன பெயர் - ப.சிதம்பரம் பதிலடி..!

 
1 1

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்த ப. சிதம்பரம், அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கூட்டணிக்காக கெஞ்சுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார்..

அதற்கு பதிலளித்த ப. சிதம்பரம், "இரு தலைவர்கள் சந்தித்துப் பேசுவதை கெஞ்சுவது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அப்படியென்றால், அவர் மற்றவர்கள் காலில் விழுந்ததை என்னவென்று சொல்வது?" என்று காட்டமாக பதில் கேள்வியெழுப்பினார்.

மகாராஷ்டிராவை போலவே எல்லா மாநிலங்களிலும் கட்சிகளை மிரட்டி அடிபணிய வைப்பதுதான் பாஜகவின் வழக்கம். சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை மனதார வரவேற்கிறேன். அவர் திறந்து வைக்கவுள்ள வேளாண் மற்றும் சட்டக் கல்லூரிகளில் அதிக அளவில் மாணவிகள் சேர்ந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இத்தகைய கல்வி நிறுவனங்கள் உள்ளூரிலேயே அமைந்ததால் தான், கிராமப்புறப் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி கற்க முடிகிறது. இதற்காக முதல்வருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பொருளாதார சரிவு, தங்க விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த ப. சிதம்பரம், "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால்தான் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 25 கோடி லட்சாதிபதிகளை உருவாக்கிவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாட்டில் நிலவும் சில்லறை தட்டுப்பாட்டைப் போக்க தவறியது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் மிகப்பெரிய பிழை" என அவர் குற்றம்சாட்டினார்.