"வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களே உஷார்"- ரூ.3 கோடியை அசால்டாக தூக்கிய கேங்

 
ச் ச்

போலியான ஆன்லைன் முதலீட்டு வர்த்தக வாட்ஸ் ஆப் குழு மூலம் ரூபாய் 3.4 கோடி மோசடி செய்த வழக்கில், 2 பெண்கள் உட்பட 3 நபர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சத்தியநாதன் (68) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பெங்களூருவைச் சேர்ந்த Fyers Securities அதிகாரிகள் என கூறிய மர்ம நபர்கள், அவரை “FYERS VIP” என்ற வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்துள்ளனர். அந்த குழுவில் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழில்முறை விவாதங்கள் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி, “FYERSHNI” என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலின்படி, 07.07.2025 முதல் 25.07.2025 வரை, சத்தியநாதன் தனது Axis Bank வங்கி கணக்கிலிருந்து ரூ.3 கோடியே 40 லட்சத்தை, மோசடியாளர்கள் குறிப்பிட்ட 13 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். பின்னர் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முயன்றபோது, அந்த மொபைல் செயலி முற்றிலும் முடக்கப்பட்டு காணாமல் போனது. இதையடுத்து தான் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அவர், National Cyber Crime Reporting Portal-ல் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல் ஆணையரகத்தின் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் 07.10.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. துரித விசாரணையின் பேரில், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான பாலசுப்ரமணியன் (51), தஞ்சாவூர் –ஜெகநாத் நகர் பகுதியைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த மற்ற எதிரிகள் முருகேஷ் (49), எப்சி (35), பஞ்சவர்ணம் (33) ஆகியோர் அன்று கைது செய்யப்பட்டனர். இதில் எப்சி மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில், முக்கிய எதிரிகள் தரகர்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள நபர்களை அணுகி, “வங்கி கணக்குகள் கொடுத்தால் அதிக கமிஷன்” என ஆசை வார்த்தைகள் கூறி பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதன்படி, சில வங்கி கணக்குகள் மூலம் சுமார் ரூ.45 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு, காசோலை வழியாக பணம் எடுக்கப்பட்டதும், அதற்காக கமிஷன் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும், விசாரணை முடிவில் 25.12.2025 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.