தீப்பற்றி எரிந்த கோதுமை லாரி - 2 டன் கோதுமை எரிந்து நாசம்

 
fire

சிவகங்கை அருகே தமிழ்நாடு அரசு உணவு விநியோக நிறுவன கிட்டங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதுமை லாரி திடீரென் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அரசு உணவு விநியோக நிறுவன கிட்டங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து சிவகங்கை கிட்டங்கிக்கு இன்று அதிகாலை, 240 கோதுமை மூடைகளை ஏற்றிக்கொண்டு தனியார் லாரி ஒன்று வந்துள்ளது. அதன் ஓட்டுனர் அதிகாலை 4.30 மணி அளவில் லாரியை நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில், லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட கிட்டங்கி பொறுப்பாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பறாவி லாரியின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. மேலும், 30க்கும் மேற்பட்ட கோதுமை மூடைகளும் தீயில் எரிந்து வீணானது.

தகவலறிந்து சம்பவ இடம் வந்து காவல் துறையினர் லாரி திடீரென தீப்பற்றியது குறித்து அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரி தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திட்டமிட்டு தீயிட்டு கொழுத்தப்பட்டாதா அல்லது லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக லாரியில் தீப்பற்றி எரிந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.