ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது நேர்ந்த துயரம்..!

சென்னை நந்தம்பாக்கத்தை அடுத்த ராமாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் கெல்வின் கென்னடி (19). இதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது நண்பர் சித்தாார்த்தன் (19). இருவரும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இருசக்கர வாகனத்தை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயில் மூலமாக சேப்பாக்கம் சென்றுள்ளனர். அங்கு போட்டியை கண்டுகளித்துவிட்டு, நள்ளிரவில் மீண்டும் மெட்ரோ ரயில் மூலம் ஆலந்தூர் வந்துள்ளனர். அங்கிருந்து தங்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆலந்தூரை அடுத்த ஆசர்கானா ஜிஎஸ்டி சாலையில் உள்ள வளைவில் வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மெட்ரோ ரயில் பாதைக்கான தூணில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கெல்வின் கென்னடி, சித்தாார்த்தன் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் வாகனத்தை இயக்கினார்களா? அல்லது கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானர்களா? என்ற கோணத்தில் போக்குவரத்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்ற நண்பர்கள் இருவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.