தவெக மாநாடு எப்போது? இன்று அறிவிக்கிறார் விஜய்..!

 
தவெக முதல் மாநாடு எப்போ..? கொள்கை , செயல் திட்டம் என்ன? கொடிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் - விஜய் தகவல்.. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ( செப் 12) வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால்பதித்தார். அத்துடம் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பதால், மாணவர்களை சந்தித்து பரிசுகள் வழங்கியது, மாலைநேர பயிற்சி பட்டறை தொடங்கியது, இலவச சட்ட ஆலோசனை மையம் என  அவரது அடுத்தடுத்த நகர்வுகள் மிகுந்த கவனம் பெறுகின்றன.  கட்சியின் செயல்பாடுகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் விஜய், அண்மையில் கட்சிக்கொடி மற்றும் பாடல்  அறிமுக நிகழ்ச்சியை நடத்தினார்.  தொடர்ந்து  இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு, தொகுதிவாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, கட்சியின் கொடி, முதல் மாநில மாநாடு ஆகிய பணிகளை திவீரமாக  மேற்கொண்டு வருகிறார். 

தவெக விஜய்

 மாநாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததன் இடையே,   தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாகவும் தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். அப்போதே விரைவில் மாநாடு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதே நேரத்தில் விக்கிரவாண்டி அருகே  தமிழக வெற்றி கழகம் மாநாடு நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில் பல நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதியும் காவல்துறை வழங்கி இருந்தது.

ஆனால் குறைந்த நாட்களே இருப்பதால் மாநாடு தள்ளி வைக்கப்படலாம்  எனவும் பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில்  இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டில் கட்சிக் கொடிக்கு பின்னால் இருக்கும் வரலாற்று தகவல், கட்சியின் கொள்கைகள், அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படும் என விஜய் ஏற்கனவே அறிவித்திருப்பதால் , மாநாடு குறித்த எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது.