முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதிகரிக்கும் பணிச்சுமை... திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்போது ?

 
TTV STALIN

முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் நிலவக்கூடிய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டிய முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் பிரிவு அலுவலர், தட்டச்சர், உதவியாளர் என 40 சதவிகிதம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ttv dhinakaran

தமிழ்நாட்டின் முதன்மை அமைச்சரான முதலமைச்சரின் அலுவலகத்திலேயே காணப்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத திமுக அரசு, மற்ற துறைகளில் காலியாக இருக்கும் லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை எப்படி நிரப்பும் ? என்ற கேள்வி பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.

அரசுப் பணியை எதிர்பார்த்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் மிகக்குறைவான காலிப்பணியிடங்களோ யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போல் அமைந்துள்ளது.

tn

திமுக தேர்தல் அறிக்கையில் 187வதாக இடம்பெற்றுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.5 லட்சம் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்படாத காரணத்தினால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் நிலவக்கூடிய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.