மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? கருத்து கணிப்பு முடிவுகள் இதோ!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மக்களவை தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை தமிழ்நாட்டில் படையெடுத்து வந்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து களம் காண்கின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிக , எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் , பாஜக கூட்டணியில் பாமக , தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் , ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. 40 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

இந்நிலையில் குமுதம் குழுமம் நடத்திய கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணியை தேர்தல் முடிவுகள் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 27 இடங்களில் வெல்லும் என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி 7 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் ஆறு தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக திமுகவுக்கு வடசென்னை , மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆரணி ,திருவண்ணாமலை ,வேலூர், தஞ்சாவூர் ,தர்மபுரி ,பெரம்பலூர், தென்காசி, கோவை, பொள்ளாச்சி ,தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியானது திருவள்ளூர் ,மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கடலூர், சிவகங்கை,புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெறுவார் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது. அதிமுக காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ,திருச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகளை கைப்பற்றும் இன்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இராமநாதபுரம் ,தேனி ,நீலகிரி ,கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் இழுப்பறி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


