யார் இந்த மேஜர் கவிதா? 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபரின் உயிரைக் காத்த 'ஏஞ்சல்'!

 
Q

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்பவர், கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனைக்குச் சுற்றுலா சென்றுள்ளார். மார்ச் 19 அன்று அங்கு செல்ஃபி எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி 150 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் விழுந்தார். மரணத்தின் விளிம்பிலும் பதறாத அவர், உடனடியாகத் தனது கார் ஓட்டுநருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 

சிவகுருநாதன் விழுந்த பகுதி யானைகள் மற்றும் புலிகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதி என்பதால், இரவு நேரத்தில் மீட்புப் பணியைத் தொடர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், விடாமல் தேடிய மீட்புக் குழுவினர் அவரைப் பள்ளத்தாக்கில் கண்டுபிடித்தனர். அவருக்குக் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்கப் போர்வைகள் வழங்கப்பட்டு, அங்கேயே விடிய விடியப் பாதுகாக்கப்பட்டார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவின் வேண்டுகோளுக்கிணங்க, வெலிங்டன் ராணுவ மையத்திலிருந்து சிறப்பு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

 

இந்த மீட்புப் பணியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் செண்டரைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சந்தன் மேத்தா தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். இதில், ராணுவ மருத்துவர் மேஜர் கவிதா வாசுபள்ளி ஆற்றிய பணி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வனவிலங்குகள் நடமாடும் நள்ளிரவு நேரத்தில், கயிறு கட்டி 150 அடி ஆழமான பள்ளத்தில் துணிச்சலாக இறங்கினார் மேஜர் கவிதா. எலும்பு முறிவுகளால் துடித்துக்கொண்டிருந்த சிவகுருநாதனுக்கு அந்த ஆபத்தான சூழலிலும் முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரைத் தக்கவைத்தார்.

பாதிக்கப்பட்டவரை மேலே கொண்டு வருவது சவாலாக இருந்ததால், ராணுவத்தினர் இரண்டு மலைகளுக்கு இடையே 70 மீட்டர் நீளமுள்ள 'டைரோலியன் டிராவர்ஸ் லைன்' (Tyrolean Traverse Line) என்ற கயிறு பாலத்தை அமைத்தனர். மேஜர் கவிதாவின் வழிகாட்டுதலின்படி, சிவகுருநாதன் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டு பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டார். மார்ச் 20 அதிகாலை 3 மணியளவில் அவர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

யார் இந்த மேஜர் கவிதா?

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் கவிதா வாசுபள்ளி ஒரு சாதனைப் பெண்மணி ஆவார். இவர் கடந்த 2025-ஆம் ஆண்டில் பிரம்மப்புத்திரா ஆற்றில் 1,040 கி.மீ. தூரம் ராஃப்டிங் (Rafting) பயணம் செய்து சாதனை படைத்தவர். தற்போது உயிரைப் பணயம் வைத்து ஒரு இளைஞரைக் காப்பாற்றிய இவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.