அதிமுக – பாஜக கூட்டணிக்கு யார் தலைமை..? எடப்பாடி பழனிசாமியா அல்லது அமித்ஷாவா?: திருமாவளவன்!

 
1 1

 விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

அதிமுக – பாஜக விரும்பி கூட்டணி அமைத்திருப்பதாக அமித்ஷா மட்டுமே சொல்லி கொண்டிருக்கிறார். இந்த கூட்டணியை என்டிஏ கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும். யார் தலைமை? அதிமுக தலைமையில் கூட்டணியா? அல்லது பாஜக தலைமையில் கூட்டணியா? என்ற கேள்வியும் எழுகிறது. அறிவிக்க வேண்டியவர் யார்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உருவாகியுள்ள இந்த கூட்டணியை தலைமை வகித்து வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது அமித்ஷாவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள். என்ன அவசரம், என்ன அழுத்தம் என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை அதிமுக தான் தெளிவுபடுத்த வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்ட பின், அந்த கூட்டணிக்கு விசிக செல்லுமா என்ற கேள்வியே தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக மீதான அக்கறையை பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனை சந்தித்து திருமாவளவன் பேசி இருந்தார். அதேபோல் பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என்றும் திருமாவளவன் தெளிப்படுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து, சிறுத்தை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குழந்தையை இழந்த பெற்றோருக்கு அந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அமைச்சர் எந்த பின்னணியில் இந்த கருத்தை சொன்னார் என்று தெரியவில்லை. வழக்கமாக நடக்கிறது என்றாலும் கூட, அவ்வாறு நடைபெறாமல் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு, குறிப்பாக அமைச்சருக்கு இருக்கிறது. ஆகவே இனி வருங்காலங்களில் அது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையிலே வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதும், அதன் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாப்பதும் மிக மிக இன்றியமையாதது. முதலமைச்சர் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

முன்னதாக வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், “மனிதர்களை யானை உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான். அரசு தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்” என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.