மது ஒழிப்பு மாநாட்டில் டி.ஆர்.பாலுவும் ஜெகத்ரட்சகனும் ஏன் கலந்துகொள்ளவில்லை - எல்.முருகன்..!

 
1

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் அவிநாசியில் நடந்தது. பிரதமரின் 74-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 74 பேர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இந்த முகாமினை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரத்ததானம் செய்து துவக்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால், அதிலிருந்து மக்களை திசை திருப்ப திருமாவளவனும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நாடகம் ஆடுகின்றனர். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் ஏன் ஜெகத்ரட்சகனும் டி.ஆர். பாலுவும் கலந்து கொள்ளவில்லை? முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்துக்கு பிறகு முதல்வர் அங்கு செல்லவில்லை, இந்த மாநாட்டிலேயே கலந்து கொள்ளலாமே.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லாத தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதையே காட்டுகிறது. இவர் எப்படி நடுநிலையாக இருப்பார்? இத்தனை நாட்களாக பொருத்திருந்து பார்த்த சீமான், கூட்டணி அரசியலுக்கு முயற்சிக்கிறார் என தோன்றுகிறது.

கச்சா எண்ணெய் வெகுவாக குறைந்த நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை இதுவரை குறைக்கப்படவில்லை என பலரும் குறிப்பிடுகின்றனர். சர்வதேச அளவில் நடக்கும் போர் உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோலியத் துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் சர்வதேச நிலையை கருத்தில் கொண்டே பெட்ரோல் டீசல் விலையை தீர்மானிக்கிறார்கள் என்று எல்.முருகன் கூறினார்.