அதிமுக-வை தேர்ந்தெடுத்தது ஏன்? – ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த திடீர் திருப்பம்; காளியம்மாள் சொன்ன அந்த ஒரு காரணம்!

 
1

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த காளியம்மாள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவர் எந்த கட்சியில் இணைவார் என்று காளியம்மாளின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தவெகவுக்கு அவர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் தனது அரசியல் பயணம் குறித்து காளியம்மாள் எதுவும் தெரிவிக்காமல் அமைதிக் காத்து வந்தார்.

இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு இன்று காலை (மார்ச் 13) காளியம்மாள் வந்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உடனிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், "அரசியலில் இருந்து விலகி ஓராண்டு காலம் மக்கள் அரசியலில் இருந்தேன். கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு மீண்டும் அரசியல் பயணமாக தற்போது அதிமுகவில் இணைத்துள்ளேன். அதிமுகவை தேர்வு செய்ததற்கான காரணம், இந்த கட்சியை தலைமை ஏற்று இருக்கக்கூடியவர் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதுதான்;

சாமானிய குடும்பத்தில் இருந்து வந்து, கட்சி தலைமையை எட்டமுடியும் என்ற ஜனநாயக சூழல் அதிமுகவில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்குவதற்கு மன உறுதியுடன் நான் இருந்ததாலுமே அதிமுகவைத் தேர்வு செய்தேன்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய பின்பு, அரசியலுக்கு நான் செல்லவில்லை என்றால் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கும், என் இன மக்களுக்குமான அரசியல் பங்கேற்பை எப்படி உறுதிச் செய்வது என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவில் இணைவது என்பது காளியம்மாள் தனித்து எடுத்த முடிவில்லை. அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான்" என்றார்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாணவி கொலை சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த காளியம்மாள், "பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரைக்கும் இது ஒரு சாபக்கேடு தான். மீண்டும் அந்த தவறை செய்வதற்கு பயம் வரும் வகையில், தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

நான் மரண தண்டனைக்கு எதிரானவள் தான்; ஆனால், சிறுமிகளை சீரழிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதில் தவறே இல்லை. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காளியம்மாள், "நான் சொல்வதைவிட தேர்தலில் மக்கள் சொல்வார்கள்" என்றார்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான காளியம்மாள், கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியிலும், 2021- ஆம் ஆண்டு பூம்புகார் சட்டமன்றத் தொகுதியிலும், 2024- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.