பாஜகவில் இணைந்தது ஏன்? - சரத்குமார் விளக்கம்!!

 
sarathkumar

சமகவை பாஜகவில் இணைத்தது குறித்து தன்னிலை விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட சரத்குமார்.

இதுதொடர்பாக நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம்.அரசியல் அனுபவம் அதிகம் இருந்த போதும், அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை, திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது. எந்த ஒரு சுயலாபத்திற்காகவும், சுய நலனுக்காகவும் அல்லாமல் எந்த அரசியல் சூழ்ச்சியும் அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களின் கூட்டணியான தமிழ் மாநில காங்கிரஸையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும், என்னைச் சார்ந்த ரசிக பெருமக்களையும், தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

sarathkumar

அதன் பிறகு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம், அரசியல் அணுகுமுறை இவை அனைத்தும் கலைஞர் அவர்களுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.அங்கும், திமுகவில் இருந்து விலகக் காரணமாய் இருந்த சிலரைப் போல், அறிவும், ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர், புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள்.
அதன் பிறகு 2007 - ஆகஸ்ட் 31 இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம். பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக, என் சமத்துவ சொந்தங்களுக்கு குடும்பத் தலைவராக மக்கள் சேவையில் என்னை அர்ப்பணித்துக் கொண்டு, பல மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான அரசியலில்ஈடுபட்டிருக்கின்றேன். எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டிருக்கின்றேன்.

sarathkumar
ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த பாராளுமன்றத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம் தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பதவி இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி, கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது.என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், நாம் மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, சக்திவாய்ந்த நாட்டின் வளர்ச்சியையும், நாட்டு மக்களின் நன்மையையும், இந்தியர்களின் பெருமையை உலகறியச் செய்யும் பாரத பிரதமர் மோடி அவர்களின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் அப்பழுக்கற்ற பெருந்தலைவர் அவர்களின் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என்று சிந்தித்தேன்.

sarathkumar
-
அதன் வாயிலாக 2026 இல் தமிழகத்தில் கோலோச்சி வரும் இரு திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்திட, நம் இலக்கையும், மக்களின் எண்ணங்களையும் இணைத்து பிரதிபலித்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது.இந்த சிந்தனை என்னை உந்திக்கொண்டிருந்ததால், மக்கள் பணியில், பதவியில் இருந்தால்தான் நம் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து, ஒரு மாபெரும் சக்தியாக இந்தியாவை அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றிச் செல்கின்ற பாரதிய ஜனதா கட்சியுடனும், பாரத பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும், நம் மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்திட எண்ணி, எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும், என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன். என் வளர்ச்சியிலும் இன்ப, துன்பங்களிலும் என்னுடன் பயணித்து, ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கும், சமத்துவ சொந்தங்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கும் நன்றி கூறி, இது என் முடிவல்ல, ஓர் வருங்கால எழுச்சியின் தொடக்கம் என்று அறிவித்து, மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.