“உயிரிழந்த நிர்வாகிக்கு விஜய் ஏன் இரங்கல் கூட தெரிவிக்கல?”- உறவினர்கள் கதறல்

 
ச்

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் அந்த மாநாட்டிற்கு கார், பஸ், வேன் மூலம் சென்றனர்.  

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கலைகோவன் இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோரும் காரில் விக்ரவாண்டி சென்று கொண்டிருந்தனர். விக்ரவாண்டி செல்லும் வழியில் அவர்களுடைய கார் விபத்தில் சிக்கியது. அதில் கலைக்கோவன், சீனிவாசன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடலும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி மாநகரம் உறையூரில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் கலைக்கோவன் இல்லத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது. அந்த உடலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்தி அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக கலைக்கோவனின் உறவினர்கள் உயிரிழந்த நிர்வாகிகளின் இறப்புக்கு விஜய் இரங்கல் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். உடற்கூறு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட உடலை அஞ்சலி செலுத்த வருவதற்காக நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். உடனடியாக அஞ்சலி கூட செலுத்த வரவில்லை. கலைக்கோவன் சிறு வயது முதலே விஜய் ரசிகராக இருந்தவர் நற்பணி மன்றத்திற்கும் அவருடைய கட்சிக்கும் சிறப்பாக செயலாற்றி உள்ளார், அவர் மாநாட்டிற்கு சென்ற நேரத்தில் உயிரிழந்தார். அதற்கு கூட விஜய் அஞ்சலி செலுத்தாதது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்த வந்த போது அவருடைய உறவினர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மேலும் எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, விஜய் இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனையாக உள்ளது என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.