மகளிர் உரிமைத் தொகையால் பறிபோன கணவர் உயிர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகளிர் உரிமைத் தொகையை தமக்கு தெரியாமல் கணவர் செலவு செய்துவிட்டாதாக கோபத்தில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்ப வராததால் மன உளைச்சலில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (32)-ராமு தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், 1 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த ஈஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையினை ஈஸ்வரன் தனது மனைவி ராமுவுக்கு தெரியாமலேயே ஏ.டி.எம் மூலம் எடுத்து செலவு செய்துவிட்டதாக தெரிகிறது. இதையறியாமல் மனைவி ராமு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது வங்கி கணக்கில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் ஏற்கனவே எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமு கணவர் ஈஸ்வரனிடம் வாக்குவாததத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் மன உளைச்சலடைந்து தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கல்யாணிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரன் வீட்டில் இருந்த கத்தியால் ஆங்காங்கே உடம்பில் கிளித்து காயப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மனைவியை போன் மூலம் அழைத்தும் அவர் வராததால் மன விரக்தியில் ஈஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து வந்த கூமாபட்டி காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு வழங்கிய மகளிர் உரிமைத்தகையை செலவு செய்வதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குடும்பத் தலைவர் குடும்பத்தையே பரிதவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

