அதிமுக 200 தொகுதிகளில் வெல்லுமா? பகல் கனவு காண்கிறார் பழனிசாமி - எ.வ.வேலு
சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிசாமி பொய்கனவு கண்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சியர் அலுவலக அறை, கூட்டரங்குகள், சி.இ.ஓ., அலுவலகம் உட்பட அரசின் அனைத்து துறைகளின் மாவட்ட அலுவலங்களும் என 8 தளங்களில் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளின் திட்ட வரைப்படம், பணி நடைபெறும் இடம், கட்டுமான பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஒவ்வொரு தளங்களாக நேரில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் ஒரு சில மாற்றங்களை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, “ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி ஒப்பந்த காலத்திற்கு முன்னதாக வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிவடையும். கட்டுமான பணிகள் தற்போது 65% நிறைவடைந்துள்ளது. கட்டுமான பணிகள் நிறைவுற்ற பிறகு முதல்வரின் இசைவு பெற்று முதல்வரின் திருகரங்களால் ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்படும்

தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என்ற தமிழக முதல்வர் காணுகின்ற கனவு நிச்சயிக்கப்பட்ட கனவு வெற்றி பெறுகின்ற கனவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என பொய் கனவு கண்டு வருகின்றார்." என்றார்.
மதுரையில் பாஜகவினர் கூடினால் திமுகவினருக்கு அச்சம் வருகிறது என்ற தமிழிசை சௌந்தர்ராஜனின் கருத்துக்கு பதிலளித்த அவர், “இது முழுக்க முழுக்க திராவிட மாடல் மண், திராவிட மண், தந்தை பெரியார் மண், பேரறிஞர் அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்ட மண், கலைஞரால் தமிழ் உணர்வை ஊட்டி வளர்ந்த மண், அந்த மூன்று பேரில் மொத்த உருவம் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். இது போன்று சொல்வதற்கெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் அசைவு தர மாட்டார். அவரது எண்ணங்கள் அத்தனையும் மக்களை நோக்கி போகிறது.” என்று கூறினார்.


