ஆகஸ்ட்டில் ரேஷன் கடைகளில் கிடைக்குமா?

 
1
ரேஷன் கார்டுகளுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வெளிசந்தையை விட குறைந்த விலையில் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த பொருட்களை அரசு மொத்தமாக டெண்டர் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் வாரியாக அனுப்பி வைக்கும். சில சமயங்களில் ரேஷன் பொருட்கள் டெண்டர் மற்றும் கொள்முதலில் தாமதம் ஏற்படும்.

அந்த சமயங்களில் ரேஷனின் குறிப்பிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் போகும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்க தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. சில இடங்களில் பொதுமக்கள் ரேஷன் பொருள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் தமிழக அரசை விமர்சனம் செய்ய தொடங்கினர்.

இத்தகைய சூழலில் தான் ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் தான் சென்னையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நலத்துறையின் செயலாளரான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் பாமாயில், பருப்புக்கான டெண்டர் என்பது சற்று தாமதம் ஆனது. அதேவேளையில் ஜூன் சப்ளை முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் பருப்பை பொறுத்தவரை 41 சதவீதமும், பாமாயிலை பொறுத்தவரை 40 சதவீதமும் நகர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் மாதத்துக்கான டெண்டர் இறுதி செய்ய்பட உள்ளது. அதன்பிறகு வரும் காலத்துக்கான டெண்டர் 3 மாதத்துக்கு முன்பாகவே இறுதி செய்யப்பட்டு தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்படும். இதனால் எதிர்காலத்தில் சிரமமின்றி ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும்’’ என்றார்.