அதிமுக கூட்டணியில் தொடர்வதா? அடுத்த ஆண்டு முடிவு என பிரேமலதா அறிவிப்பு..!!
2024 தேர்தலின் போதே ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக ஒப்பந்தம் போட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிமுக சார்பில் 19.06.2025 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளார்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அத்துடன் 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கும்படி கோரி எல்.கே. சுதீஷ் சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில், சென்னையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. 2024 தேர்தலின் போதே ராஜ்ய சபா சீட் தருவதாக கடிதம் வாயிலாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த தேர்தலில் சீட் எனக் கூறுகின்றனர்.

அரசியலில் தேர்தலை நோக்கிதான் அனைத்து பயணமும் இருக்கும் என்பதால் எங்களின் நிலைப்பாடும் அதை நோக்கிதான் இருக்கும். தேர்தலை மனதில் வைத்தே தேமுதிக பயணிக்கிறது. 2026 தேர்தலில் தேமுதிக தனது கடமையை நிறைவேற்றும். அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். அதிமுக உடனான கூட்டணி குறித்து பிரேமலதா உறுதியாக தெரிவிக்காததாலும், திமுகவுடன் இணக்கமான பேச்சுவார்த்தையில் இருப்பதாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.


