தேமுதிக, தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா..? மழுப்பலாக பதில் அளித்த சரத்குமார்..!

 
1 1

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று வரை பியூஷ் கோயலை, பாஜகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து வந்தனர். அந்த வகையில், நடிகரும், பாஜகவை சேர்ந்த நிர்வாகியுமான சரத்குமார்  பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், கட்சித் தலைமை உத்தரவிடுவதை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறினார். அவர் பேசுகையில், “பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருப்பதால் மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்ளேன். இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என நான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அதே சமயம் ,என்னுடன் பயணித்தவர்கள் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. இதற்காக கட்சித் தலைமை என்ன உத்தரவு விடுக்கறதோ அதனை செய்வேன்” என்றார்.

அவரிடம் பாஜக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அதனை தலைமை கலந்து பேசி முடிவு செய்யும் என்று கூறிய அவர், ஏற்கனவே இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் மீண்டும் இணைந்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது என்றார். விஜய்க்கு இந்த கூட்டணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அதுபற்றி எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு சென்றார்.