இனியாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா? தங்கம் தென்னரசு கேள்வி??
கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், “இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு கிடைக்கப்பெறும் தொல்லியல் சான்றுகள் மூலம் , கீழடியில் நகர நாகரிகம் நிலவியது உறுதியாகியுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர் நாகரிகம் உலகுக்கே முன்னோடியாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கீழடி கொந்தகையில் 800 மீ அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து , மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை மறு வடிவமைப்பு செய்திருக்கின்றனர். 3டி முறையில் 80 சதவீத அறிவியல் மற்றும் 20 சதவீத கலையை பயன்படுத்தி 2 பழந்தமிழர்களின் முகங்கள் வடிமைக்கப்பட்டிருக்கிறது.

டி.என்.ஏ பகுய்ப்பாய்வு நடத்தி இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. கீழடி ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை என்றும், கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரத்திலும் இருந்திருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
— Thangam Thenarasu (@TThenarasu) June 29, 2025
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள்… https://t.co/szMyXFmbsS
முன்னதாக, கீழடி ஆய்வறிக்கை முடிவுகளை இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி ஆய்வறிக்கை முடிவுகள் அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளர் தந்த ஆய்வு முடிவுகளில் போதுமான தகவல்கள் இல்லை , கூடுதல் ஆய்வுகள் தேவை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


