தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? ஓபிஎஸ் சூசக பதில்..!

 
1 1

அதிமுவில் ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அதிமுக-வை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டங்களுக்கு இடையே, தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ். தள்ளப்பட்டுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகக் கூறி வரும் ஓ.பி.எஸ்., விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவ்வாறு தனிக்கட்சி தொடங்கினால், அது வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) வரும் தேர்தலில் களம் காண்பதால், ஓ.பி.எஸ். அந்தத் தரப்புடன் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற பேச்சு பலமாக எழுந்துள்ளது. அல்லது மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடருவாரா என்ற கேள்வியும் நிலவுகிறது. இது குறித்து இன்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்துக் கேட்டபோது, "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று ஓ.பி.எஸ். சூசகமாகப் பதிலளித்தார். குறிப்பாக, "தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா?" என்ற நேரடி கேள்விக்கு அவர் ஆம் என்றோ, இல்லை என்றோ பதில் அளிக்காமல் அமைதியாகச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.