"கிராமத்தில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக பெண்கள் கூறுகின்றனர்" - முதல்வர் ஸ்டாலின்

 
tnn

தமிழ்நாடு முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின்  தலைமையில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (22.9.2023) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள், தயாரிக்கப்பட்டு வரும் கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான மகளிருக்கான இலவச நகர பேருந்து பயணத் திட்டமான விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் ஆகியவற்றின் பயன்கள் மகளிர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலும், மாநிலத் திட்டக் குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், நடப்பில் உள்ள ஆய்வுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டன.

tn

மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் அவர்கள் மூன்றாவது திட்டக் குழு கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மாநிலத் திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விவரித்தார்.மாநில திட்டக்குழு கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை:- கழக ஆட்சியின் கொள்கை வகுப்புக்கு அடித்தளமாக இருக்கிற திட்டக் குழுவினருடன் கலந்துரையாடல் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களோடு மனநிறைவாகவும் இருக்கிறது. ஏன், வழிகாட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
உரையாடுவது எனக்கு இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக திட்டக்குழு துணை தலைவர் திரு.ஜெயரஞ்சன் அவர்களுக்கும், திட்டக்குழுவின் முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களுக்கும், என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

அதிலும் குறிப்பாக ஜெயரஞ்சன் அவர்கள், அரசின் வழிகாட்டிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார். முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதல் வழங்குகிறீர்கள். முக்கியத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த துணை நிற்கிறீர்கள். அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது என திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

நான் முதல்வன் திட்டம் குறித்து அறிக்கை வழங்க வேண்டும். மக்களை தேடி மருத்துவ திட்டம் அனைவருக்கும் சுகாதார வசதியை உறுதி செய்துள்ளது. அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்ட குழு சிறப்பாக செயல்படுகிறது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிராமத்தில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக பெண்கள் கூறுகின்றனர் என்றார்.