மழையால் துணி காய மாட்டேங்குதா..? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..!

 
1 1

மழை காரணமாக, வீட்டிற்குள் ஈரமான துணிகளை உலர்த்துவதால், வீட்டிலுள்ள ஈரப்பதம் மெதுவாக அதிகரித்து சுவர்கள் சேதமடையலாம். துணியில் இருந்து தரையில் தொடர்ந்து தண்ணீர் சொட்டுவதால் சீக்கிரமாக சேதமடையும் வாய்ப்புள்ளது. அதேபோல், ஈரப்பதம் அதிகரிப்பது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் உங்கள் துணிகளை உலர்த்தலாம்.

துணி துவைத்த பின், எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு துணியில் உள்ள தண்ணீரை நன்றாக கைகளால் பிழிய வேண்டும். இல்லையென்றால், துவைத்த துணிகளை தண்ணீர் குழாய் மீது அடுக்கி 15 நிமிடங்களுக்கு பின் பார்த்தால் தண்ணீர் நன்றாக வடிந்திருக்கும். இப்போது துணிகளை காய வைத்தால் காயும் நேரம் கட்டாயமாக குறையும்.

மேலும், ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தி உங்கள் துணிகளை உலர்த்தலாம். குறிப்பாக, ஹேர் ட்ரையரை பயன்படுத்தும்போது துணிகளில் இருந்து அதை சிறிது தொலைவில் வைத்துக்கொள்வது நல்லது. இது உங்கள் ஈரமான துணிகளை மிக விரைவாக உலர்த்தும் ஒரு எளிய வழியாகும். 

துணிகளை ஃபேனிற்கு அடியில் காய வைத்தாலும், மழைக்காலத்தில் துணி முற்றிலுமாக காய இரண்டு நாட்கள் கூட ஆகலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில், துணி காய வைக்கும் அறையில் டிஹைமிடிஃபையர் (Dehumidifier) பயன்படுத்தலாம். இது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி துணிகள் காய்வதற்கு உதவியாக இருக்கிறது.

 ஈரப்பதத்துடன் இருக்கும் துணியை அயர்னிங் செய்தால் துணி நிமிடங்களில் காய்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல், சுருக்கங்களும் நீங்கும். இதனை கவனமுடன் செய்ய வேண்டும்.

மழைக்காலங்களில், வீடு முழுவதும் கயிறு கட்டி காய வைப்பது ஒரு புறம் சிரமம் என்றாலும்,மறுபுறம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால், துணிகளை காய வைப்பதற்கு என கடைகளில் கிடைக்கும் ஸ்டாண்டுகளை பயன்படுத்தலாம். ஈரமான துணிகளை நெருக்கமாக போடாமல், இடைவெளிவிட்டு போட்டால் சீக்கிரமாக துணிகள் உலரும்.

மழைக்காலங்களில், சற்று அதிக வேளைப்பாடுகள் உள்ள துணிகள் மற்றும் கனமான துணிகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு, பெட் ஷீட், ஜீண்ஸ் பேண்ட் போன்றவற்றை துவைக்க வேண்டாம். அத்தியவசியமான மற்றும் வெளியிடங்களுக்கு சென்றால் தேவைப்படும் துணிகளை மட்டும் துவைக்க வேண்டும்.

வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பவர்கள், டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்த்தால் துணிகளில் நாற்றம் வராது. அதே போல,கைகளால் துவைப்பவர்கள், துணிகளை ஊறவைக்கும் தண்ணீரில் டிடர்ஜெண்டுடன் சிறிது வினிகரையும் சேர்ப்பது மழைக்காலத்தில் துணிகளில் ஏற்படும் நாற்றத்தை தடுக்கும்.

உங்கள் துணிகள் மிகவும் ஈரமாக இருந்தால், உடனடியாக அவற்றை அயர்ன் செய்யவும். இது துணிகளில் ஈரப்பதத்தையும் துர்நாற்றத்தையும் குறைக்கும். இது ஈரமான துணிகளை உலர்த்துவதை உங்களுக்கு எளிதாக்கும். ஆனால், இந்த வழிமுறை அனைத்து துணிகளிலும் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த முறை குறிப்பாக பாலியஸ்டர் துணிகளுக்கு நல்லதல்ல.

மழைக்காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாமல் துணி காய்வதால், உலர்ந்த பின் துணியில் துர்நாற்றம் ஏற்படலாம். இதனை தடுக்க, துணி அலசும் கடைசி தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழச் சாறு பிழிந்து துணியை அலசுங்கள்.