“இந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”.. அகமதாபாத்தில் ஆய்வு மேற்கொண்ட மோடி..
அகமதாபாத் மேகானி நகரில் விமான விபத்து நடைபெற்ற பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்து உள்ளனர். விமானம் மேகானி நகரில் அமைந்துள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் சுமார் 90டன் வெள்ளை எரிபொருள் இருந்ததால் விமானம் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டத்தில் பெரும்பாலானவர்களின் உடல்கள் கருகிய நிலையில் இருந்துள்ளன. இதனால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் அவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அதிர்ஷ்டவசமாக 11ஏ இருக்கையில் பயணித்த லண்டன் குடியுரிமை பெற்ற ரமேஷ் என்கிற ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துயரம் ஒருபுறம் இருக்க, விழுந்து நொறுங்கிய பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதியில் இருந்த 7 மருத்துவர்களும் தீக்கிரையாகியுள்ளனர். சிலர் விடுதியின் 2வது மற்றும் 3வது மாடிகளில் இருந்து குதித்து காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். இருப்பினும் 60 மருத்துவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேரை காணவில்லை எனவும் அகில இந்திட மருத்துவ சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தச்சூழலில் பிரதமர் மோடி விபத்து நடைபெற்ற இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விமானம் உருக்குலைந்து கிடக்கும் இடம் மற்றும் மீட்பு பணிகளை பார்வையிட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தால் நாம் அனைவருமே மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். திடீரென பல உயிர்களை இழந்ததில் ஏற்பட்டுள்ள வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். அவர்களில் வலியை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இழப்பினால் ஏற்பட்ட வெற்றிடம் பல ஆண்டுகளுக்கு இருக்கும். ஓம் சாந்தி..” என்று குறிப்பிட்டுள்ளார்.


