ஆம்பூர் பிரியாணியில் உயிருடன் நெளிந்த புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி
ஆம்பூரில் ஆம்பூர் பிரியாணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டபோது இலையில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினர் மூன்று குழந்தைகள் ஒரு பெண் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலை சுற்றுலா சென்ற போது ஆம்பூரில் நிறுத்தி ஆம்பூர் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டனர். அப்போது குழந்தைகள் சாப்பிட்ட பிரியாணியில் புழு இருந்தால் அதிர்ச்சியடைந்த சதீஷ், இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது ஹோட்டல் உரிமையாளர் நூருத்தீன் மற்றும் பணியாளர்கள் அலட்சியமாக பதிலளித்ததால் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹோட்டல் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் நகர போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரியாணி மற்றும் இறைச்சி கடைகளில் பிரிட்ஜ்களில் கறி இருப்பு வைத்து பிரியாணி செய்து வருவதால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுபோன்ற தரமற்ற கறி மற்றும் பிரியாணி விற்பனை செய்து வரும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் உரிமையாளர் நூருத்தியின் என்பவரிடம் கேட்ட போது பிரியாணியில் உயிருடன் புழு இருக்க வாய்ப்பில்லை. பிரியாணி தயாரிக்கும் போதும் சரி, அதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போது சரி, நூறு சதவீதம் அரசின் விதிகளை கடைபிடித்து சுத்தமாக தான் உணவுகளை வழங்கி வருகிறோம். மழை காலம் என்பதால் பிரியாணி வழங்கிய வாழையிலை பின்புறத்தில் புழு இருந்து இருக்கலாம். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்ளுகிறேன்” என்றார்.


