தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கேண்டீன் உணவில் புழு, பூச்சி!

 
புழு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் கலந்து உணவுகள் வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னாள் முதல்வர்  முத்தமிழறிஞர் கலைஞரின் சீரிய முயற்சியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகமாக உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை திருவாரூரில் அமைத்தார். திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வரும் உணவில் பூச்சிகள், புழுக்கள் கலந்து இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. கடந்த சில மாதங்களாகவே மாணவர்களுக்கு வழங்கும் உணவில் தொடர்ந்து புழுக்கள் பூச்சிகள் தட்டான்கள் இருந்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை புழுக்கள், பூச்சிகள் அடங்கிய உணவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவிலும் புழுக்கள் பூச்சிகள் இருந்துள்ளது. உணவில் புழுக்கள் நெளியும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுகதேவ் கூறுகையில், “மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமற்ற முறையில் இருக்கின்றது. மேலும் இந்த உணவுகளில் புழுக்கள் பூச்சிகள் கலந்து வருகின்றன. இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் தெரிவித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துவோம்” என எச்சரித்தார்.