தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் XBB வகையை சேர்ந்தது - சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

 
corona

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலில் பெரும்பாலானவை எக்ஸ்.பி.பி. வகையை சேர்ந்தது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மத்திய சுகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கயில் ஒரு நாள் பாதிப்பு 3016- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,509- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலில் பெரும்பாலானவை எக்ஸ்.பி.பி. வகையை சேர்ந்தது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் மார்ச் மாதம் வரை சேகரிக்கப்பட்ட 144 மாதிரிகள் மாநில மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்ப்பட்டது. அதில் 83 புள்ளி 6 சதவீதம் எக்ஸ்.பி.பி. வகையை சேர்ந்தது என உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன் முதலில் தமிழ்நாட்டில் எக்ஸ்.பி.பி. கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இது வரை தமிழ்நாட்டில் எக்ஸ்.பி.பி. வகையின் 13 உட்பிரிவுகள் கண்டறியப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. எக்ஸ்.பி.பி. வகை கொரோனா பாதிப்புக்கு பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படாத காரணத்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.