காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பழையசித்துவார்பட்டி, மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகள் வினோதினி (வயது 20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வினோதினி நேற்று காலை வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த வினோதினியின் குடும்பத்தினர் இதுகுறித்து வடமதுரை போலீசில் புகார் செய்தனர். வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வினோதினியை தேடி வந்த நிலையில், இன்று அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வினோதினியின் சடலம் மிதந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வினோதினியின் உடலை கிணற்றிலிருந்து கைப்பற்றினர். அதனைத்தொடர்ந்து வினோதினியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வினோதினி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததும், அதற்கு வினோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த வினோதினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது. பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


