நாய் கடிக்கு சிகிச்சை பெறாத இளைஞர்.. 2 மாதங்களுக்குப் பிறகு உயிரிழப்பு!
ஓசூர் அருகே நாய் கடித்து 2 மாதம் கழித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அடுத்த தளி அருகே தின்னுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விக்டர் பாபு என்பவருடைய மகன் எட்வின்(21). எம்.பி.ஏ படித்துவந்த இவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே இருந்த நாய் கடித்ததாக கூறப்படுகிறது. நாய் கடித்ததை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துவந்த எட்வின், சிகிச்சையும் பெறாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வினுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, தளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதான் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எட்வினை அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இளைஞர் எட்வின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாய் கடித்த உடனேயே முறையான சிகிச்சை பெற்றிருந்தால் இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்காது என கூறப்படுகிறது. மேலும் தின்னூர் கிராம பகுதியில் ஏராளமான நாய்கள் இருப்பதாகவும், அரசு உடனடியாக அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.


