விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பூட்டிய கார்... 3 நாட்களுக்கு பின் 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு

 
ந் ந்

திருமங்கலம் அருகே காணாமல் போன சிறுவன் காரில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலப்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி, அக்கிராமத்தைச் சார்ந்த சிவகாசியில் இ. எஸ். ஐ . மருத்துவர் ஆக பணி புரியும் மாரிமுத்து (37) தனது காரில் அக்கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் இல்லத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் காரை கடந்த 13ஆம் தேதி வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அன்று திருமங்கலம் அருகே நடுக்கோட்டை கிராமத்தைச் சார்ந்த ராஜசேகர் தம்பதியினர், தனது 7 வயது மகன் சண்முகவேலுடன் மேலப்பட்டி கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்காக வந்திருந்தனர். அப்போது 13ஆம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த தனது மகனை காணவில்லை என பேரையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் புகார் அளித்திருந்ததை அடுத்து போலீசார் 7 வயது சிறுவனை தேடி அலைந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவர் மாரிமுத்து திருவிழா முடிந்து காரை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு செல்வதற்காக வந்து காரை திறந்த போது, காரினுள் ஏழு வயது சிறுவன் சண்முகவேல் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பேரையூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சண்முகவேலின் உடலை பேரையூர் போலீசார் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சண்முகவேல் விளையாடிக் கொண்டிருந்தபோது காரின் பின்பக்க கதவு திறந்து இருந்தது என்றும், உள்ளே சென்று ஒளிந்து விளையாடிய போது காரின் கதவு எதிர்பாரா விதமாக சண்முகவேல் பூட்டி கொண்டதாகவும் அதனை திறக்க முடியாமல் தவித்திருந்ததாகவும், சண்முகவேல் சத்தம் போட்டும் கோயில் திருவிழா என்பதால் ஒலிபெருக்கி சத்தத்தில் கேட்காமல் காரின் உள்ளேயே உயிரிழந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.