விருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் இருந்து காரியாபட்டி செல்லும் சாலையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் திருச்சுழி - காரியாபட்டி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரியாபட்டி சாலையில் உள்ள வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் புல்லட் பைக்கில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை போலீசார் விசாரிக்க முற்படும்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். அதில் மற்றொரு நபரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் மதுரை, மேலூர் - பனங்காடி யைச் சேர்ந்த அபினேஷ் என்பதும், தப்பி ஓடிய நபர் திருச்சுழி சந்தூரணிக்கரை பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மகன் சோலை என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அபினேஷ் என்ற இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து புல்லட் பைக் மற்றும் 50 கிராம் கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அபினேஷ் ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.


