காவல் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! கோவையில் பரபரப்பு
கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடைபெற இருப்பதாகவும், விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்கு நேற்றிரவு சுமார் 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் வந்துள்ளார். தன்னை சிலர் பின் தொடர்வதாக கூறிய நிலையில் பணியில் இருந்த காவலர் இது குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். காவலர் வேறு பணியில் இருந்த நிலையில், புகார் அளிக்க வந்தவர் காவல் நிலையத்தின் முதலாவது மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்த கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு மேல் காவலர்கள் பணிக்கு வந்த போது, உதவி ஆய்வாளர் அறையில் அடையாளம் தெரியாத நபர் தூக்கு போட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் காவல் நிலையத்தில் வரவழைக்கப்பட்டு காவல் நிலையததில் பதிவான காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, உக்கடம் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "காவலர் செந்தில்குமார் பணியில் இருந்த போது காவல் நிலையத்திற்கு வந்த நபர், தன்னை சிலர் விரட்டுவதாக தெரிவித்துள்ளார். காவலரிடம் பேசியவர் பின்னர், அவருக்கு தெரியாமல் மாடியில் உள்ள அறைக்கு சென்று அவருடைய வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நபர் தற்கொலை செய்து கொண்டது யாருக்கும் தெரியவில்லை, காலையில் ரோல் கால் முடிந்து பணிக்கு காவலர்கள் வந்த பொழுதுதான் அறைக்குள் யாரோ இருப்பது தெரிய வந்தது, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வேஷ்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த இருக்கின்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த போது அந்த நபர் பேருந்தில் வந்து இறங்குவதும், போத்தீஸ் கார்னர் பகுதியில் நடந்து செல்வது, காவல் நிலையத்திற்கு வருவது, மாடிக்கு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இறந்தவர் பாக்கெட்டில் இருக்கும் டைரியை பார்த்த போது இறந்தவர் பெயர் ராஜன் (50) என்பதும், ராமசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது, அவர் 10 நாட்களாகவே மன அழுத்ததில் இருந்து வந்திருப்பதும் அவரது குடும்பத்தினரிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது. நீதிபதி விசாரணை நடந்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் சம்மந்தப்பட்ட காவலர்கள், பணியின் போது அலட்சியமாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும். இரவு நேரத்தில் பணியின் போது கவனக்குறைவாக இருப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது லாக்கப் டெத் என சொல்ல முடியாது, காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை. இறந்தவர் மீது வழக்குகள் ஏதாவது இருக்கின்றதா என்பது குறித்து இனிமேல் தான் பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதனிடையே உயிரிழந்த ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த ராஜனின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே தற்கொலை செய்து கொண்ட ராஜன், சாலையில் ஓடி வருவது, காவல் நிலையத்திற்கு வருவது, காவலரிடம் பேசுவது உள்ளிட்ட உள்ளிட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். காவல் நிலையத்தில் காவலர் பணியில் இருக்கும் பொழுதே உள்ளே நுழைந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


