பாலம் கட்டத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி! அலட்சியத்தால் நேர்ந்த சோகம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே பாலம் அமைக்க சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அதில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே ஓடைக்காடு குன்னம்பதியை சேர்ந்த ஓட்டுநர் யோகநாதன். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது தங்கையை பார்த்துவிட்டு கிணிப்பாளையம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு நேற்றிரவு ஓட்டுனர் யோகநாதன் சென்றுள்ளார். அப்போது நெட்டச்செல்லாம்பாளையம் பகுதி வழியாக கணிப்பாளையம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் எந்தவித தடுப்புகளும் இல்லாமல் பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் ஓட்டுநர் யோகநாதன் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவ்வழியாக சென்ற கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது என்ற எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த விபத்து நிகழ்ந்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுனர் யோக நாதனுக்கு ஒப்பந்ததாரர் உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யோகநாதன் உறவினர்கள் பெருந்துறை காவல் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஒப்பந்ததாரரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


