“15 நாட்கள் தரமுடியாது ஒரே ஒருநாள் தான்”... சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி
பெண் போலீசாரை அவதூராக பேசிய வழக்கில் கைது செய்யபட்டுள்ள யுடியூபர் சவுக்கு சங்கரை நாளை மாலை 6 மணி வரை ஒரு நாள் போலீஸ் காவல் வைத்து விசாரிக்க உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ் இனியன் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் யுடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி சமூக வலைதலத்தில் அவதூராக பேசி வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சவுக்கு சங்கர் மீது புகார் அளிக்கபட்டது. அதனையடுத்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டார்.
இந்த நிலையில் உதகை அருகே உள்ள புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லி ராணி என்பவர் அளித்த புகாரின் பேரில், சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவரை கைது செய்த நீலகிரி மாவட்ட போலீசார் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ் இனியன் முன் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான அதிமுக வழக்கறிஞர்கள், சவுக்கு சங்கரை இதே போன்ற வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளதாகவும் எனவே நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கைது நடவடிக்கையை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்தனர்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி அந்த மனுவை நிராகரித்ததுடன் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை விசாரிக்க வேண்டியிருப்பதால் ஐந்து நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கரை நாளை மாலை வரை ஒரு நாள் மட்டுமே போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ள சவுக்கு சங்கரை 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். இதனையடுத்து சவுக்கு சங்கரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.