முக்கிய அறிவிப்பை வெளியிடும் லைக்கா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா பிரொடக்ஷ்ன்ஸ் நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது லைக்கா. கடந்த 2014-ஆம் ஆண்டு விஜய்யின் ‘கத்தி’ படத்தின் மூலம் தனது தயாரிப்பை லைக்கா தொடங்கியது. இதையடுத்து வடசென்னை, 2.O, காப்பான், தர்பார், டான் உள்ளிட்ட மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன், நாய் சேகர் உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் லைக்கா தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இது எந்த படத்தின் அறிவிப்பாக இருக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'சந்திரமுகி'. மலையாள படத்தின் ரீமேக்காக உருவான இப்படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரபல இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது.
இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து 17 ஆண்டுகள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பி வாசு இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வேட்டையன் மற்றும் சந்திரமுகி இடையேயான கதைக்களத்தை கொண்டு உருவாகவுள்ளது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. சில காரணங்களால் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை கைவிட்ட நிலையில் லைக்கா நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் உரிமையை சமீபத்தில் 1 கோடி கொடுத்து லைக்கா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை தான் நாளை லைக்கா வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.