டி.ராஜேந்தரை சந்தித்த கமலஹாசன்... உடல்நலம் குறித்து விசாரிப்பு !
அமெரிக்கா செல்லவுள்ள டி.ராஜேந்தரை சந்தித்து உலகநாயகன் கமலஹாசன் உடல்நலம் விசாரித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டவர் இயக்குனர் டி.ராஜேந்தர். வீட்டில் ஓய்வெடுத்து வந்த இவருக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், டி.ராஜேந்தருக்கு இதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டு சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன்பிறகு அமெரிக்கா செல்ல முடிவு செய்து ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதேநேரம் முன் ஏற்பாடுகள் செய்ய சமீபத்தில் நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பிரபல மருத்துவமனையில் ஒன்றில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்பட உள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் மருத்துவமனையில் இருக்கும் டி.ராஜேந்தரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று வெளிநாடு செல்லவிருக்கும் டி.ராஜேந்திரனை நடிகர் கமலஹாசன் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


