கோவை சரளா ஒரு நடிப்பு ராட்சசி... 'செம்பி' பட ட்ரைலர் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய கமல்ஹாசன்!
பிரபு சாலமனின் செம்பி பட ட்ரைலரை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
தமிழில் மைனா, கயல், கும்கி, தொடரி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் பிரபு சாலமன். தற்போது பிரபு சாலமன் செம்பி என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கோவை சரளா 90 வயது பாட்டியாக முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ படத்தின் புகழ் அஸ்வின்குமார் கதாநாயனாக நடித்துள்ளார். அஸ்வினுக்கு ஜோடியாக ரேயா நடித்துள்ளார். இந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க பஸ் பயணத்தை கதைக்களமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் செம்பி படத்தின் ட்ரைலரைப் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். பிரபு சாலமன், அஸ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் கமல்ஹாசனைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். கமல், சரளாவை நடிப்பு ராட்சசி என்றும்பாராட்டியுள்ளார்.
1995-ம் ஆண்டு வெளியான 'சதிலீலாவதி' படத்தில் கோவை சரளா கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


