90 மணி நேர போராட்டம்.... துருக்கியில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை உயிருடன் மீட்பு

 
turkey

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் இடிபாடுகளில் 90 மணி நேரமாக சிக்கியிருந்த பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 

துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன.  கடந்த திங்கள் கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.5 என்கிற அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாலும், 40 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளாலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சுக்குநூறாகியுள்ளன. எங்கு பார்த்தாலும், கட்டிடக் குவியல்கள், மனித உடல்களாக காட்சியளிக்கின்றன.  இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இதுவரை 24,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதேபோல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும், அந்நாட்டு மீட்பு குழுவினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நிலையில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. யாஹிஸ் உலஸ் என்ற அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.