இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

 
monkeypox


இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது. 

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.  வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது.  குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும்,  சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்றும், எனவே இதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம்  அறிவுறுத்தியிருந்தது.  

monkeypox

பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது. குரங்கம்மை பரவல் அதிகரித்துள்ளதால், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் எளிதில் தாக்கலாம் என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.