14 கங்காருகள் அடித்துக்கொலை - இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனம்

 
k

 கங்காரு என்றதும்  தத்தித் தத்தி தாவி செல்வதும் குட்டியை தாங்கி செல்லும் பாசமும் தான் நினைவிற்கு வரும்.  அப்படிப்பட்ட கங்காருகள் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடக்கும் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.  ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காக விளங்கி வருகிறது கங்காரு.  அந்த கங்காருகள்தான் அடித்து கொலை செய்யப்பட்டு கிடக்கின்றன.

நியூ  சவுத் வேல்ஸ் பகுதியில் 14 கங்காருகள் உயிரிழந்து கிடந்ததையும்,   சாலைகளில் ரத்தம் படிந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.   போலீசார் விசாரணை  மேற்கொண்டதில் கங்காருகளை அடித்து கொலை செய்த வழக்கில் இரண்டு இளைஞர்கள் சிக்கினர்.

சிசிடிவி காட்சிகளையும் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு  கொலை செய்யப்பட்ட  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

kk

 17 வயதுடைய சிறுவர்கள் கங்காருகளை அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.   மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் சட்டத்தின்படி விலங்குகளை கொடுமைப் படுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   14 கங்காருகளை அடித்துக் கொலை செய்த இளைஞர்களுக்கும் இத்தகைய தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

 கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் கங்காருகள் பாதி அழிந்தன.  கங்காருகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன.   உலகம் முழுவதும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.   இந்த நிலையில் 14 கங்காருகளை இளைஞர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் ஆசிரியர்கள் மக்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.