நேபாள விமான விபத்து - 22 பேரின் உடல்களும் மீட்பு

 
napal crash

நேபாள நாட்டில் 22 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. 

நேபாள நாட்டின் போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று முன் தினம் காலை தாரா ஏர்  விமானம் புறப்பட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தில் இரண்டு ஜெர்மனியர்கள், 4 இந்தியர்கள் ,13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேர் பயணம் செய்தனர். இதனிடையே மாயமான விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவம்  ஈடுப்பட்டது.  இந்தநிலையில், முஸ்டங் மாகாணம் தசங்  என்ற பகுதியில் சனோஸ்வர்  என்ற இடத்தில் மலைப்பகுதியில் மோதி விமானம் விபத்துக்குள்ளானதை நேபாள ராணுவம் உறுதி செய்தது. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி நேற்று முன் தினம் நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று மீட்புப்பணியில் நேபாள ராணுவத்தினர்  ஈடுபட்டனர். நேற்று மதியம் வரை நடைபெற்ற மீட்பு பணியில் 14 உடல்கள் மீட்கப்பட்டன. 

nepal crash

இந்நிலையில், நேற்று இரவு வரை நடைபெற்ற மீட்பு பணியில் மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது உடலை மட்டும் காணவில்லை. இதனிடையே இன்று காலை மீண்டும் மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள ஒருவரின் உடலும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தலைநகர் காத்மாண்டு எடுத்துச் செல்லப்பட்டது. இதேபோல் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.