சுதந்திர தினத்தன்று உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 22 பேர் பலி

 
ukraine

உக்ரைன் நாட்டில் சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர். 

நேட்டோ அமைப்புடன் இணைய முயற்சித்த காரணத்திற்காக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இரு தரப்பு படைகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். ரஷ்யாவிற்கு எதிரான போரில் 9 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தலைவர் ஜெனரல் வலேரி ஜலுஷ்னி தெரிவித்து இருந்தார். 6 மாதங்களாக போர் நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில், உக்ரைன் நாட்டில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஏற்கனவே சுதந்திர தினத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

russia

அதேபோல ரஷ்ய படைகள் நேற்று இரவு உக்ரைன் மீது தனது தாக்குதல் நடத்தின. மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.