நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - பிரதமர் பதவியை தக்கவைத்தார் போரிஸ் ஜான்சன்

 
Boris Johnson

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தார். 

2019ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். 2020ம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பிறந்த நாள் விருந்து நடத்தியதோடு, அதில் கலந்து கொண்ட அறிக்கை வெளியாக அந்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக அந்நாட்டு போலீசார் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதமும் விதித்தனர். இது அவரது சொந்த கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் போரிஸ் ஜான்சன் ஆட்சியில் வரி உயர்வு, வாழ்க்கைச் செலவுகள் உயர்வு மற்றும் அரசு கொள்கைகள் உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்த அவரது சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினர் பிரதமருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரத்தை அடுத்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் போரிஸ் ஜான்சன் மீது வைக்கப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகளான நிறைவு விழா கொண்டாட்டத்தின்போது போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து தெரிவிக்கப்பட்டது.

Boris

இதனை தொடர்ந்து நேற்று இரவு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவீத வாக்குகளை பெற்று போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றதோடு, தனது பிரதமர் பதவியையும் தக்க வைத்துக் கொண்டார். சொந்த கட்சியினரே கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றிருந்தாலும், 148 ஆளுங்கட்சி எம்.பிக்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருப்பது அவரது அதிகாரம் வழுவிழந்ததையே காட்டுவதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.