சீனாவை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா

 
china

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் இருந்து தான் முதல் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. 2019 ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இந்தியா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட வைரஸின் உருமாற்றத்தின் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என அடுத்தடுத்து திரிபுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

china

வைரஸ் பரவிய போது சிக்கலை சந்தித்த சீனா, கடும் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அங்கு குறைவான அளவே பாதிப்பு இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.  

china

ஓமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தொற்று பரவல் அதிகமுள்ள 10க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜிலின் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.