ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 250க்கும் மேற்பட்டோர் பலி..

 
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 250க்கும் மேற்பட்டோர் பலி..

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்  130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  உணரப்பட்டது.  தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்திலுள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம்,  51 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்திருக்கிறது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால்  வீடுகள், கட்டிடங்கள்  குலுங்கி இடிந்தன.  அத்துடன் அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம்

இந்த நிலையில் மக்கள்தொகை  அதிகமுள்ள பகுதிகளில் உணரப்பட்ட சக்திவாய்ந்த  நிலநடுக்கத்தால், தற்போது வரை 250 பேர் வரை பலியாகி இருப்பதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆப்கனின் பக்திகா மாகாணத்தில்  தான்  அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும்,  பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி  தெரிவித்தார்.  உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும்   வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான வீடுகள்  இடிந்துள்ளதாகவும்,  கட்டிட இடிபாடுகளில் பலர்  சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு  விரைந்த மீட்பு படையினர்,  மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 250க்கும் மேற்பட்டோர் பலி..

மேலும், ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி , அதில்   சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட  இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும்  உணரப்பட்டது.  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்,  லாகூர்,  முல்தான்,  குவெட்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.