இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு : விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்..

 
விமான பயணம்


இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  

இலங்கையில் நிலவி வரும் காலம் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சனை அனைவரும் அறிந்து ஒன்றே. அங்கு உணவு பொருட்கள்,  பெட்ரோல் -  டீசல்,  சமையல் எரிவாயு போன்ற  அத்தியாவசிய பொருட்கள்  கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். எரிபொருள் பற்றாக்குறையால் மிக அவசியமான பணிகளுக்கு மட்டுமே பெட்ரோல் ,  டீசல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல்,  டீசல் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டீசல் கிடைக்காததால், போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

எரிபொருள் விலை உயர்வு

90% தனியார் பேருந்துகள் ஓடவில்லை.  இதனால் மக்கள் ரயில்களில்,  உள்ளூர் பேருந்துகள் என பொது போக்குவரத்தையே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இருந்தபோதிலும் வாகன போக்குவரத்து முடக்கம் இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   இந்தநிலையில் விமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் விமான சேவையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமான நிலையம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “டீசல் கிடைக்காததால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத தனியார் பஸ்கள் இயங்கவில்லை. விமான நிலையத்தை நடத்துவதற்கு அத்தியாவசியமான ஊழியர்களே தற்போது பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். நாட்டின் விமான எரி பொருள் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் சிறிய அளவிலான எரி பொருள் மாத்திரமே கிடைக்கிறது. சிவில் விமான சேவை அதிகார சபையுடன் இணைந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எரி பொருள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.