இலங்கை மீட்டெடுக்க, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல்..
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. விலைவாசியும் வின்னை முட்டும் அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது இதனால் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் எதிர்க்கட்சிகளும் , கூட்டணிக்கட்சிகளும் சேர்ந்து அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். ஏற்கனவே அதிபர் கோத்தபய பதவி விலக மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேபோல் மகிந்த ராஜபக்சேவும், மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியிருக்கிறார். இலங்கையின் பொலனருவா பகுதியில் நடைபெற்ற மே தின விழாவில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி சிக்கலில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க , மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


