பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாக்கும் - அமெரிக்கா அந்தர்பல்டி

 
us pakistan

பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த கருத்துக்காக அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், பாகிஸ்தான் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை பாதுகாக்கும் வல்லமை கொண்டது என்பதில் நம்பிக்கை உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரச்சார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன்,  பாகிஸ்தான் தான் உலகின் ஆபத்தான நாடு என கூறினார். எந்த வித ஒற்றுமையும் இன்றி அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு என்றார். பாகிஸ்தான் குறித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோ பைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது.

joe biden

இந்நிலையில், பாகிஸ்தான் 'ஆபத்தான நாடு' கருத்தில் இருந்து அமெரிக்கா பல்டி அடித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  அணு ஆயுதத்தை பாதுகாப்பதில் பாகிஸ்தானின் திறன் மற்றும் உறுதிபாட்டில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாதுகாப்பு மற்றும் வளமான பாகிஸ்தான் எப்போதும் அமெரிக்காவுக்கு முக்கியமானதாக நாங்கள் பார்க்கிறோம். பாகிஸ்தானுடனான நீண்டகால ஒருங்கிணைப்பை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் மிகவும் வலிமையான உறவை கொண்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.