பெல்ஜியம் விரைந்தார் அமெரிக்க அதிபர் - நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை

 
joe biden

உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். 

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 29-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெல்ஜியம் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்-ஐ சென்றடைந்த அவரை அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ வரவேற்றார். தனக்கு சிறப்பான வரவேற்பை அளித்த பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூவிற்கு நன்றி என்றும்,  புடின் உக்ரைன் மீது தொடுத்து வரும் போருக்கு தொடர்ந்து பதிலளிக்கும் விதமாக நட்பு நாடுகளாகிய நாம் இணைந்து செயாலாற்றி நடவடிக்கைகளை எடுப்போம் என்பதை தான் எதிர்நோக்குவதாகவும் பைடன் கூறியிருப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

joe biden

நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உடனான அவசர ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், அங்கிருந்து ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உடனான ஆலோசனைக்கூட்டத்திலும்  பைடன் பங்கேற்று பேசுகிறார். இதைத் தொடர்ந்து நாளை போலந்து சென்று அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரிசெஜ் டூடாவுடனும் பைடன் பேச உள்ளார். பைடனின் இந்த 4 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகளை பைடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.