துருக்கியில் மீட்பு பணிகளுக்கு நடுவே திடீர் நிலநடுக்கம் - மக்கள் அதிர்ச்சி!

 
Turkey

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன.  கடந்த 06ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.5 என்கிற அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாலும், 40 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளாலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சுக்குநூறாகியுள்ளன. எங்கு பார்த்தாலும், கட்டிடக் குவியல்கள், மனித உடல்களாக காட்சியளிக்கின்றன.  இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் இந்தியாவும், மீட்பு குழு, நிவாரண பொருட்கள், மருந்து பொருட்கள், மீட்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளது. 

Turkey

நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், துருக்கியின் காஹ்ராமன்மராஸ் நகரில் இருந்து தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 15.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.