சூடானில் நீடிக்கும் மோதல் - இதுவரை சுமார் 200 பேர் பலி

 
sudan

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறிவைத்து ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  ஒருபக்கம் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். துணை ராணுவப்படை அறிவித்துள்ளது.  ஆயுதப்படைகள் இடையே நடந்து வரும் கடும் துப்பாக்கி சண்டையால் தினமும் ஏராலமானோர் உயிரிழந்து வருகின்றனர். 

துப்பாக்கி குண்டு சத்தத்தால் சூடான் தலைநகர் கார்த்தும் அதிர்ந்து வரும் நிலையில்,  சிறியதாக பீரங்கிகளால் இரு தரப்பும் தாக்கி கொள்வதால் தலைநகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.   தலைநகர் கார்த்துமை அடுத்துள்ள ஓம்தூர்மன்,  பாஹ்ரி ஆகிய நகரங்களிலும் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும்,  இந்த மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், மோதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.